
சின்ன டவுனான திருச்சியில் காலேஜ் முடித்து விட்டு டெல்லியில் C A படிப்பதற்கு வந்த சமயம் அது, வீட்ல படிக்கறத விட்டுட்டு, சும்மா வெளியில் வந்த நேரம், ஒரு தெரு கூத்து / ஒரு மாஜிக் நடந்து கொண்டிருந்தது, நானும் பார்க்க தொடங்கினேன், மாஜிக் நடத்துபவரை சுற்றி வட்டமாக ஆட்கள், சின்ன சின்ன மாஜிக் காண்பித்தார் ( இரும்பு குண்டை முழுங்குவது ...)
தீடீர் என்று ஒரு சிறுவனை அழைத்து , அவனை படுக்க போட்டார், சில நொடிகளில் அவன் மயக்கம் வந்தது போல் கண்ணை மூடிக்கொண்டு படுத்து விட்டான், அவன் தலை வழியாக முகத்தை மறைத்து ஒரு துண்டை போட்டார், அந்த சிறுவனின் தலையை, மூன்று பக்கமும் , அதாவது, வலது, இடது, & மேல சும்மா ரப்பர் மாதிரி திருப்பினார், நிஜமாகவே ரொம்ப பயமாக இருந்தது ..இப்போ எல்லாரயும் காசு போட சொன்னார், எல்லாரும் நாலணா , பத்து காசு...ன்னு தூக்கி போட்டாங்க , நான் மட்டும் போடலை, ஏன்னா எங்கிட்ட காசு இல்ல ( ஹி ஹி !!!!), ஆனா பாக்கெட்ல ஒரு முழு நூறு ருபாய் ( அப்படி போடுறா அறுவாளை ) ...
இப்போ அந்த மாஜிக் நடுத்துபவர், எல்லாரும் காசை போடுங்க , போடுங்க போடுங்க காசை போடுங்கன்னு கத்தறார், நம்ப கை பாக்கிட்டுகுள்ள போக மாட்டேங்கது, இப்போ அவர், இன்னும் ரெண்டு ஆள் காசை போடல .... அது வரைக்கும் , நான் ( அதாவது மாஜிக்காரர் ) ரத்தம் கக்குவேன் ன்னு சொல்லிட்டு, மண்டை ஓட்டை எடுத்து , ஏதோ பாத்தரத்தை பிடிக்கறா மாதிரி உல்டாவா பிடிச்சுக்கிட்டு , ரத்த வாந்தி எடுக்க தொடங்கினார் , மிச்சம் இருந்த ஒரு ஆளும் காசை போட்டுட்டார் ..நான் மட்டும் தான் பாக்கி, கை கால் உதறல் எடுக்குது, நான் மெதுவா நூறு ருபாய் நோட்டை எடுத்து கொடுத்தேன் , அதை வாங்கிக்கிட்டு ஏதோ உதறினார், அந்த பையன் எழுந்து ஓடிவிட்டான், கூட்டம் கலைந்தது ... நான் மட்டும் அங்கே இருந்தேன் , பயங்கர பயமாய் இருந்துச்சு, அவரு மண்டை ஓட்டை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி போவதற்கு ஆயுத்தமானார்... க்யா பாய், க்யூன் கடேயோ ...(என்ன எதுக்கு நிக்கறன்னு கேட்டார்), நூறு ரூபாய் ..ன்னு எனக்கு மட்டும் கேக்கறா மாதிரி சொன்னேன் ...க்யா ன்னு கத்தினார், ஒரு உதறலுடன் நூறு ரூபாய் ன்னு சொன்னேன், அவரு வந்த சில்லறையை எண்ணி பார்த்தார்... தேறலை, உடனே அந்த ருபாய் நோட்டை எடுத்து கொடுத்தார், அதை வாங்கி கொண்டு எடுத்தேன் ஓட்டம் ..வீட்ல வந்து தான் நின்னேன்
கிட்ட தட்ட இதே சீன் ஒரு வடிவேலு காமிடியில் பார்த்த ஞாபகம்- பல நாட்களுக்கு முன் எனக்கு நிஜமாகவே நடந்தது.... ஆச்சர்யமான விஷயம்
கொஞ்ச நாளைக்கு முன் ஒரு எஸ் ம் எஸ் வந்தது , இங்கு வரவும், இலவச Portrait கிடைக்கும் என்று. அதற்க்கான நேரம் எல்லாம் குறித்து கொண்டு, சொன்ன நேரத்தில் ரெடியாகி , குடும்ப சகிதமாக போனோம், போனவுடன் தான் தெரிந்தது அது ஒரு போட்டோ ஸ்டுடியோ... ஒரு வெள்ளைகார பெண்மணி வந்து போட்டோ எடுக்க ஆயுத்தமானார்... எங்களை ஒரு மாதிரி எல்லாம் உட்கார சொன்னார், சும்மா கிளிக் பண்ணி தள்ளினார், உட்கார்ந்து, நின்னுக்கிட்டு, ஒருத்தர் தலை மேல மற்றவர் தல ...,மூன்று பேரும் ( நான், மனைவி, & குழ்ந்தை) ஒரே சமயத்தில் மற்றவரை கிச்சு கிச்சு மூட்ட வேண்டும், இப்படி பல போஸ்களில் ....சுமார் ஒரு முன்னூறு போடோ எடுத்திருப்பார் அந்த பெண்மணி, இது எல்லாம் அரை மணி நேரதற்குள்...மெதுவாக , ஆமாம் , இம்மா நிறைய போட்டோ எடுக்குறீங்களே , என்ன விஷயம்ன்னு கேட்டோம், ...அவர் சொன்னது, எல்லா போட்டோவியும் காமிப்போம், எது வேணுமோ அது வாங்கிக்கலாம் ..என்ன விலையாகும் கேட்டோம், ஒவ்வொன்னுக்கும் ஒரு விலை, போகும் பொழுது ரிஷப்ஷன்ல கிடைக்கும் என்றார்.
அங்க என்ன விலைன்னு கேட்டோம், ஒரு போட்டோ இலவசம், அதோட நீங்க இன்னுமும் போட்டோ வாங்கனும்னு சொன்னா, ஒரு போட்டோவுக்கு, 180. திர்ஹம் ஆகும் , (இது சுமார் .2,250. ரூபாய்,)
வெளியில் வந்தவுடன் அந்த பிரமிப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை, சும்மா யார் நம்மளை ௦300 ௦௦ போட்டோ எடுக்கறா, இருந்தாலும் அவர்களின் sales tactic லேசாக பிடிபட ஆரம்பித்தது... எங்களை அறியாமலே , நாங்கள் எங்களுக்குள் இன்னும் ஒரு ரெண்டு படம் ஆர்டர் செய்யலாம் என முடிவு செய்து கொண்டோம்....
ஒரு சுப யோக சுப தினத்தில் போட்டோ பார்க்க அழைத்தார் அந்த பெண்மணி, ஒரு நல்ல அறையில், பெரிய திரை முன்பு கம்ப்யூட்டர் மூலம், ஒவ்வொரு போட்டோவாக பவர் பாயிண்ட் மூலம் போட்டார், அதில் வரும் எல்லா போட்டோக்களும் நன்றகாவே இருந்தது , என்னுடைய மூளை இங்கிருந்து ஓடு என்று சொல்லிக்கொண்டே இருந்தது , மனசு அந்த போட்டோக்களை பார்ப்பதில் இருந்தது ... இப்போ அதே படங்களை மெதுவாக பார்ப்போம் என்றார், மூளை அதெல்லாம் வேண்டாம், நான் ஏற்கனேவே ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்து விட்டேன், அது போதும் என்றேன், அருகில் உள்ள கை அகல ஒரு போட்டோவை காண்பித்து , இலவச படத்தின் சைஸ் இது தான் என்றார், திரையில் பார்க்கும் படத்துக்கும் இதுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம், பெரிய சைஸ் எவ்வளவுன்னு மனசு கேட்க சொல்லி , வாய் வழி கேட்டேன், அடுத்த சைஸ் ..ஒன்லி 300.திர்ஹம் ( Rs 3,750) என்றார், வேண்டாம் சீக்ரம் ஓட்ரா என்று மூளை சொல்லியது. இந்த படங்கள் எல்லாம் ஒரு மெமரி ஸ்டிக்கில் போட எவள்ளவு பணம் என்று கேட்டேன், இதுக்கும் ஒன்லி .3,000 திர்ஹம் ( ரூபாய் 37,500 only) என்று சொன்னார், ஒரே ஒரு படம் போதும், அதுவும் அந்த உள்ளங்கை அகல போட்டோவே போதும் என்று , நிஜமாகவே அங்கிருந்து ஓடி வந்தேன், அருகில் உள்ள தானே நகரும் படியில் கூட , வேகமாக தாவி தாவி, ஓடி, பார்கிங் வந்து காரை எடுத்து , அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தேன்.
அப்பறம் சில நாள் கழித்து அந்த போட்டோவை வாங்கி வந்தேன்.( காசு ஏதும் கொடுக்காமல் ) ... அது தான் இது.

.
அண்மையில் எகிப்து சென்று வந்தேன் ஒரு சொந்த வேலை விஷயமாக, பிரமிட், ... எதுவுமே பார்க்கவில்லை, ஆனால் அங்கு 6th அக்டோபர் சிட்டி ( ஆமாம் அந்த நகரத்தின் பேரே 6th October city தான் ) ...எங்கு பார்த்தாலும் வீடுகள், புதிதாக கட்டிய, மேலும் கட்டிக்கொண்டு இருக்கிற வீடுகள், அப்படின்னு நிறைய வீடுகள், நிறையன்னா ரொம்ப நிறைய ....இது மாதிரி ஒரு புது சிட்டி இவ்வளவு பெரிய சிட்டி வேறு எங்கும் வந்ததா பார்த்ததும் இலலை ..கேள்வி பாட்டதும் இலலை ...ரொம்ப பெரியது, நினைவுக்கு வந்த சண்டிகர், நியூ மும்பை.... ஆனால் இந்த சிட்டி , இதை எல்லாம் விட மிக பெரியது ஒரு 50 km சாலையில் இரு பக்கம் போனாலும வீடு, வீடு & வீடுகள் , கைரோ மிக பெரிய , நிறைய மக்கள் வாழும் நகரம், அப்படியே கைரோ மாக்கள் அனைவரும் இந்த புதிய நகரத்திற்கு வந்து விடலாம் போல் தோன்றியது. கைரோ கொஞ்சம் (???) நெருக்கமான நகரம், தூசும் , மாசும் நிறைய உள்ள நகரம், போக்குவரத்து நெரிசலோ உலக பிரசித்தம், எந்த கட்டிடமும், தூசுடன் அழுக்காக தான் இருக்கும் அதனால் தானோ என்னோமோ, இவ்வளவு பெரிய சுத்தமான புது சிட்டியை பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது.
கைரோவில் எடுத்த சில போட்டோக்கள்

காயலாங் கடையில் ஒரு கோட்டு - சூட்டு

குதிரை வண்டி ...

கைரோ சாலை

நானும் என் மாமா பையன் ஸ்ரீனிவாசனும்

3 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:
மேஜிக் அனுபவம் ரசிக்க வைத்தது ;))
ரெண்டு அல்லது மூன்று இடுகைகளை இணைத்தது விட்டீர்களே!
ஈராக் போல எகிப்து பற்றியும் சில இடுகைகளை எழுதுங்கள்!!
சார் கராமா வந்த ஒரு கருப்புப் போர்வையோட வரேன். பாக்கெட்ல ஒரு 1000 திர்ஹம்ஸ கட்டா வச்சுக்கோங்க.
ஈராக் போல எகிப்து பற்றியும் சில இடுகைகளை எழுதுங்கள்!!
கருத்துரையிடுக